துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,
துபாய்க்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின்றி தவித்த 10 மாத குழந்தை , பல்வேறு சிரமங்களுக்கு பிறகு தாய் அஸ்தியுடன் தமிழ்நாடு வந்திறங்கிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன். இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவனை பார்த்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை செலவிட்ட நிலையில் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், வேலவன் குடும்பம் வறுமைல் சிக்கியது. வேலனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது மனைவி பாரதி கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணிப்பெண்ணாக வேலைக்கு சென்றதால் ஓரளவு சிக்கலின்றி வாழ்க்கை ஒடியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பாரதி இந்தியா திரும்பினார். கடந்த மார்ச் மாதம் மீண்டும் தனது 7 மாத கைக்குழந்தையான தேவேசுடன் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்ற பாரதி அங்குள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்த போது எதிர்பாராவிதமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.
இதையடுத்து அங்குள்ள ரஷீத் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாரதி சிகிச்சை பெற்று வந்தார். அவரது குழந்தையை அவருடன் பணிபுரிந்த பெண்கள் பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் பாரதி கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாரதியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு போதிய பணம் இல்லாததால், பாரதி தன்னுடைய மனைவியின் இறுதிச்சடங்கினை, அங்கே செய்துவிடும் படி எழுதி கொடுத்துள்ளார். அதன் படி, அவரது அனுமதியின் பேரில் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது. பெற்ற தாயை இழந்து தந்தையின் முகம் காணாது தவித்த கைக்குழந்தையின் நிலை கண்டு கண் கலங்கிய அவரது தோழிகள் இது குறித்து துபாய் நகர திமுக அமைப்பாளர் எஸ் எஸ் மீரான் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சென்றார். உடனே அவர், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூதரகத்துடனும் அங்குள்ள திமுக நிர்வாகிகளுடனும் பேசி அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டார். இதன் பின்னர் இறந்த தாய் பாரதியின் அஸ்தியுடன் 11 மாதக் குழந்தை தேவேசை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து, தந்தை வேலவனிடம் ஒப்படைத்தார். அப்போது வேலன், தன்னுடைய மகனை பார்த்தவுடன் கட்டியணைத்து கண்ணீர் மல்க கொஞ்சினார். தாயில்லாமல் தவித்த 10 மாத குழந்தையான தனது மகனை பத்திரமாக தமிழகம் அழைத்து வர உதவி புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேலவன் உருக்கமுடன் நன்றி தெரிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் ஏற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக உதவி புரிவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் தாயை இழந்து தவித்த குழந்தையை, பாரதியின் தோழிகள் கடந்த இரண்டு மாதங்களாக பத்திரமாக பாத்து கொண்டதற்கும் அவர் நன்றி கூறினார்.