Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்க உள்ளதால் விஜய் பேசப்போவது என்ன? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. 2 கட்டங்களாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தொகுதி வாரியாக பங்கேற்கின்றனர்.
கிட்டதட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்நிகழ்ச்சி தமிழக அரசியல் களத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்க உள்ளதால் விஜய் பேசப்போவது என்ன? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்தாண்டு நடந்தது என்ன?
கடந்தாண்டு முதல்முறையாக விஜய் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். இது அவரது அரசியல் வருகைக்கான தொடக்கமாக பார்க்கப்பட்டது. ஜூன் 17 ஆம் தேதி நடந்த அந்த விழாவில் விஜய் பேசியது பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. அதாவது, “நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்து வரும் நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். நம்ம கையை வைத்து நம்மளையே குத்துவாங்க. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன். உங்கள் தாய் தந்தையிடம் சொல்லுங்கள்.
காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். அம்பேத்கர் பெரியார் காமராஜர் பற்றி படியுங்கள். வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய், மேலும் ‘காடு இருந்தா எடுத்துக்குவானுங்க.. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க.. ஆனா, படிப்பை மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என தனுஷ் நடித்த அசுரன் படத்தின் வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார். அதனால் இந்தாண்டு அரசியல் தலைவராக விஜய் பேசப்போவது என்ன என்பது இன்றைய நாளின் ஹாட் டாபிக் ஆக உள்ளது.