தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை
மருத்துவகல்லுாரி முதல்வரிடம், சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
அரியலுார் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். விடுதியில் பூச்சி மருந்து குடித்தவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாணவி சிகிச்சையில் இருந்த போது பேசிய வீடியோவை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலுார் மாவட்ட செயலர் முத்துவேல் வெளியிட்டார். மாணவியின் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
ஜனவரி 31 ஆம் தேதி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவி தற்கொலை விவகாரத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட 4 சட்டப் பிரிவுகளில் பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.சி.பி.ஐ. இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் எஸ்.பி. நிர்மலாதேவி டி.எஸ்.பி.க்கள் ரவி சந்தோஷ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி, மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளியில் ஆசிரியர்கள், பள்ளி, விடுதி நிர்வாகிகள், வார்டன், மாணவிகளிடம் என பலரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மைக்கேல்பட்டியில் உள்ள விடுதியில், சுமார் 6 மணி நேரமும், மீண்டும் இரண்டாவது நாள் காலை 10:30 மணியில் இருந்து மாலை வரை சுமார் 7 மணி நேரமும் இன்ஸ்பெக்டர்கள் சுமதி, ராஜசேகர் அடங்கிய குழுவினர் விடுதி பணியாளர்கள், விடுதியில் உள்ள பதிவேடுகள் போன்வற்றை ஆய்வு செய்து விசாரித்தனர். இதை போல நேற்று சி.பி.ஐ., டி.எஸ்.பி., சந்தோஷ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு மதியம் 12:00 மணிக்கு வந்தனர். பின்னர், மாணவியின் மருத்துவ ரிப்போர்ட், மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஐ.சி.யூ.,வார்டில் பணியில் இருந்த செவிலியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மருத்துவகல்லுாரி முதல்வரிடம், சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.