TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில், சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை மாவட்டங்கள்:
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு இன்று முதல் நாளை வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் நாளை மாலை 3. 30 மணி வரை கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு இன்று முதல் நாளை வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 15, 2024
கொளுத்திய வெயிலிலிருந்து வெளுத்தும் மழை:
தமிழ்நாட்டில் மே மாதம் தொடக்கம் வரை கோடை வெயிலான வாட்டி வதைத்து வந்தது. கோடை வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி செல்ல வேண்டாம் என்று கூட அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, மே மாதம் 2 வாரங்களில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கோடை மழை மிதமாக ஆரம்பித்தது. அதையடுத்து, பல மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் பல பகுதிகள் வெப்பத்திலிருந்து குளிரத் தொடங்கியது.
இந்நிலையில், வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது.