TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்த நிலையில், மாநிலத்தின் தலைநகரம் சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் விடிய, விடிய மழை:
இந்த நிலையில், சென்னையில் நேற்று மாலை, முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு முதல் விடிய. விடிய பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அடையாறு, கிண்டி, கோயம்பேடு, தரமணி, வேளச்சேரி, அசோக் நகர், தி நகர், வடபழனி, பாரிஸ், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் என பல பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து வானிலை வறண்டு காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்தது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், காலை முதலே சில்லென்ற வானிலை நிலவி வருகிறது. விடியற்காலை கடந்தும் பல இடங்களில் காலையில் சென்னையில் மழை பெய்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 21, 2024
அடுத்த 3 மணி நேரம்:
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் பெய்து வந்த மழையால் சென்னையின் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து போலீசார் காலை முதலே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும் மழை காரணமாக அதற்கேற்றவாறு ஆயத்தமாகி செல்கின்றனர்.