TN Rain: சில்லென மாறிய சென்னை! அடுத்த 2 நாட்கள் தமிழ்நாட்டில் காத்திருக்கு மழை - எங்கெல்லாம்?
சென்னையில் திடீரென்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்கள் பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே வெயில் வாட்டி வதைப்பது வழக்கம். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே கொண்டிருக்கிறது.
சில்லென்று மாறிய வானிலை:
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென வானம் மேகூட்டத்துடன் காணப்பட்டது. இன்று மதியம் முதலே சென்னையில் வானிலை மேகமூட்டமாக மந்தமாக காணப்படுகிறது. சென்னையின் புறநகரின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. இன்றைக்கும் நாளைக்கும் மழை பெய்யக்கூடும் என்று கருதப்படுகிறது.
இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு:
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூரிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று கருதப்படுகிறது. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.






















