ஒன்றரை கோடி தடுப்பூசி ; நேரடி கொள்முதலில் இறங்கிய தமிழ்நாடு
1 மே முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போட உள்ளதால் இந்த நடவடிக்கை.
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடவடிக்கை தமிழ்நாடு அரசால் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே 55.51லட்சம் பேருக்கு இதுவரை மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 1 மே 2021 முதல் மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காகக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதால் முன்னேற்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வழியாக ஒன்றைரைக் கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது. கோவிஷீல்ட் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்ற பலர் தடுப்பூசி இல்லை எனத் திருப்பி அனுப்பப்பட்டனர். அரசு தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று சொன்னாலும் சுமார் 8 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்திருந்தது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,’தற்போதைய தேவைக்கு நம்மிடம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிதான் செலுத்தப்படுகிறது என்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை. இதுபோன்ற புகார்களுக்கு தடுப்பூசி எடுத்துச் செல்வதில் ஏற்படும் தளவாடப் (Logistics) பிரச்னை காரணமாக இருக்கலாம்’ என்றார். இருந்தும்20 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்குத் தேவை என முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது அரசு தடுப்பூசிக்கான நேரடிக்கொள்முதலில் களமிறங்கியுள்ளது.