கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, 5, 812.64 கோடி மதிப்பிலான கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 ஆண்டுகளில் 5, 812 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 17, 450 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை:
தமிழகத்தில் 2021 ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் இணையத்தில் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார். இதேப்போன்று கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோயில்களைச் சீரமைப்பது, புனரமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதோடு கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவோம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ரூ. 5, 812 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு:
தமிழ்நாட்டில் உள்ள கோயில் பாதுகாப்பு பற்றி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கும் 75 உத்தரவுகளை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 5, 812 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 17, 450 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.