இனி IPL கோவையில்தான் போல! 30 ஆயிரம் இருக்கைகள், பெர்த் ஸ்டைல் மைதானம்! கொங்குக்கே பெருமை!
கோயம்புத்தூரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானம் 30 ஏக்கரில் 30 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்பட உள்ளது. இதன் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய அடையாளமாக புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்ட ஆளுங்கட்சியான திமுக அறிவிப்பை வெளியிட்டது. இந்த மைதானம் கோயம்புத்தூரில் அமைய உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
500 கோடியில் மைதானம்:
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அமைய உள்ள இந்த மைதானம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட உள்ளது. இந்த மைதானம் மொத்தம் 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஆப்டஸ் மைதானத்தின் வடிவத்தில் கட்டப்பட உள்ளது.
30 ஆயிரம் இருக்கைகள்:
இந்த மைதானம் மொத்தம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. ஆடுகளம் வடக்கில் இருந்து தெற்காக 140 மீட்டரும், கிழக்கில் இருந்து மேற்காக 170 மீட்டராகவும் அமைய உள்ளது. பவுண்டரி எல்லைகள் போட்டியின்போது நிர்ணயிக்கப்படும். இந்த மைதானம் மொத்தம் 30 ஆயிரம் இருக்கைககள் வசதியுடன் கட்டப்பட உள்ளது.
நிமிடத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர்:
இந்த மைதானத்தில் மழை நீரை உறிஞ்சும் வசதி அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. அதாவது, நிமிடத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் வகையில் தண்ணீர் உறிஞ்சும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது, இந்தியாவிலே மைதானத்தில் தேங்கும் தண்ணீரை அதிவிரைவாக அகற்றும் வசதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மட்டுமே உள்ளது. அதை மிஞ்சும் வகையில் இந்த மைதானத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
பல தரப்பு பயன்பாடு:
இதற்கான ஆலோசனைக்கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி பல தரப்பு தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் கட்டப்பட உள்ளது. அதாவது, மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் டிஜிட்டல் ஒளிப்பதாகைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள், வீரர்கள் தங்கும் அறை, நீச்சல் குளம், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த மைதானத்திற்கான மாதிரி படங்கள் உருவாக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளது. அவர் அனுமதி அளித்த பிறகு மைதானம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
2027ம் ஆண்டு திறப்பு விழா:
மைதானம் அமைய உள்ள கோவை ஒண்டிபுதூர் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 9 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மைதானம் 2027ம் ஆண்டுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இந்திய அணி ஆடும் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படுவதுடன் ஐபிஎல் போட்டிகளும் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது.




















