TN Rain: புத்தாண்டு கொண்டாடுவோர் கவனத்திற்கு: 9 மாவட்டங்களில் மழை இருக்கு. !
Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் , கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
NOWCAST pic.twitter.com/kdgzg8gswX
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 31, 2024
இன்றுடன் இந்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில், 2024 ஆண்டு பெய்த மழை அளவு குறித்தான தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “
வடகிழக்கு பருவமழையானது இயல்பாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் பெய்யும். இந்த ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 589. 9 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழையானது இந்த கால அளவில் இயல்பைவிட 33 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 4 சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாதங்களாக பார்க்கையில், அக்டோபர் மாதத்தில் இயல்பைவிட 25 சதவிகிதம் அதிகம் எனவும் நவம்பர் மாதத்தில் 23 சதவிகிதம் குறைவு எனவும் மற்றும் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட 164 சதவிகிதம் அதிகமாக மழை பெய்து உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டங்களாக பார்க்கையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களான நெல்லை, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழைபெய்துள்ளதாக தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழையானது இயல்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை இருந்தது. 16 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் இருந்தது.
2024 ஆண்டில் மழையளவு:
2024 ஆண்டில் மழையளவை பார்க்கையில், அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில், இயல்பைவிட 100 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும், 27 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 12 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் எந்த மாவட்டத்திலும் இயல்பைவிட குறைவாக மழை பெய்யவில்லை எனவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையானது இயல்பாக டிசம்பர் மாதத்துடன் முடியும் நிலையில், தற்போது ஜனவரி 15 வரை நீடிக்கும் என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.