Prithika Yashini : எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த முதல் திருநங்கை போலீஸ்! ப்ரித்திகா யாஷினி புதிய வரலாறு!
உலகின் உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டை எட்டிய காவல்துறையைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்தியா யாஷினி படைத்துள்ளார்.
ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி மூன்றாம் திருநர் வளர்ச்சியும் உத்வேகத்துடன் முன்னழுதப்பட வேண்டும் என்பதை அனைவரும் உணரும் இன்னொரு நிகழ்வு நடந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அவர்கள் கல்வி, தொழில் ரீதியாக வளர்ச்சி அடைய ஏராளமான திட்டங்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் காவல்துறையில் முதன்முதலில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ப்ரித்திகா யாஷினி.
எவரெஸ்ட் ஏறி சாதனை:
இவர் காவல்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பல சாதனைகளை செய்து வருகிறார். உலகின் மிகப்பெரிய சிகரமாக திகழ்வது இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம். இந்த சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்துள்ளனர். பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் முகாமிற்கு ஏறிய காவல்துறையைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையை ப்ரித்திகா யாஷினி படைத்துள்ளார். இந்த பேஸ் கேம்ப் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 572 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இந்த சாதனையை படைத்துள்ள ப்ரித்தியா யாஷினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் பிறந்தவர் ப்ரித்தியா யாஷினி. இவர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பதவியேற்றார். தமிழக காவல்துறைக்கான உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது இவர் விண்ணப்பித்தபோது, திருநங்கை என்ற காரணத்தால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தமிழக காவல்துறையின் முதல் திருநங்கை எஸ்.ஐ.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இவர் தமிழக காவல்துறை தேர்வில் பங்கேற்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அவர் தேர்வு எழுத அனுமதித்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்ற ப்ரித்திகா யாஷினிக்கு உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
உடற்தகுதி தேர்வில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி தாமதமாக வந்ததாக கூறி அவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் நீதிமன்றம் சென்ற அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மீண்டும் போட்டிகளில் பங்கேற்று நீளம் தாண்டுதல், எறிபந்து போட்டிகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்தார். இதனால், தோற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முறையிட்டு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் ப்ரித்திகா யாஷினி வெற்றி பெற்றார்.
எஸ்.ஐ. பணிக்கு நடத்தப்பட்ட அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற ப்ரித்திகா யாஷினி 2017ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார். இவர் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடித்தார்.