New year Celebration: இருசக்கர வாகன ஓட்டிகளே உஷார்..! புத்தாண்டில் உங்களுக்கு மேலும் ஒரு கட்டுப்பாடு.. எச்சரிக்கும் காவல்துறை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புத்தாண்டை கொண்டாட இன்று இரவு பல்வேறு இடங்களில் ஏராளமான கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிகளிலும், கொண்டாட்டத்தின் போது பொதுவெளியிலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் காவல்துறை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வரிசையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை காவல்துறை அறிவித்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகனங்களில் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளுக்கு வர வேண்டாம் - காவல்துறை:
ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு, 8 மணிக்கு மேல் கடற்கரைகளுக்கு செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் உள்ள மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓர பகுதிகளுக்கு மக்கள் வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு:
சென்னையில் மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.
தீவிர கண்காணிப்பு:
முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாகக் கண்காணிக்கப்படும். ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. கொண்டாட்டத்திற்கு மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் 80% அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.