குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ஷெல்கேவை பாராட்டி மன்னார்குடியில் பேனர்..
மகாராஷ்ட்ராவில் ரயில்வே தண்டவாளத்தில் தவறிவிழுந்த பார்வையற்ற தாயின் குழந்தையை, தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியரை பாராட்டி மன்னார்குடியில் உள்ள வடுவூரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மண்டலத்துக்குட்பட்டு அமைந்துள்ளது, வாங்கனி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில், பார்வையற்ற தாய் ஒருவர் தனது 6 வயது ஆண் குழந்தையுடன் நடந்து கொண்டிருந்தார். தாயின் கையைப் பிடித்து விளையாடிக்கொண்டே நடந்துவந்த சிறுவன், திடீரென தண்டவாளத்தில் நிலை தடுமாறி விழுந்தது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் அதிவேகத்தில் விரைவு ரயில் ஒன்று வேகமாக குழந்தையை நோக்கி வந்து கொண்டிருந்தது. குழந்தை விழுந்ததாலும், ரயிலின் சத்தம் கேட்டதாலும் அந்த பார்வையற்ற தாய் அதிர்ச்சியில் உறைந்து பயத்தில் அலறினார். குழந்தைக்கு மிக அருகில் வந்ததால், ரயில் ஓட்டுநரால் ரயிலையும் நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் ஹாரனை மட்டுமே எழுப்பி எச்சரித்தார்.
இதைப்பார்த்த, அந்த ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர் அதிவேகத்தில் ரயில் வருவதைப்பற்றி துளியளவும் கவலைப்படாமல், தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்ற ஓடினார். ரயில் குழந்தையை நெருங்கும் முன்னர், குழந்தைக்கு அருகில் சென்ற ரயில்வே ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை தூக்கி நடைமேடையில் நின்ற தாயிடம் ஒப்படைத்தார். அடுத்த சில நொடிகளில் தானும் நடைமேடையில் ஏறி உயிர் பிழைத்தார்.
இவை அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இதை ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவிற்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும், குழந்தையின் உயிர்தான் முக்கியம் என்று தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய பாயிண்ட்மேனாக பணிபுரியும் மயூர் ஷெல்கேவிற்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவருக்கு மத்திய அரசு சார்பில் ரூபாய் 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் கிராம மக்கள் மயூர் ஷெல்கேவை பாராட்ட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, மயூர் ஷெல்கேவை பாராட்டி அவர்களது ஊரில் பேனர் வைத்துள்ளனர். அவர்கள் வைத்துள்ள பேனரில் மயூர் ஷெல்கேவை ”ரியல் ஹீரோ” என குறிப்பிட்டு வடுவூர் மக்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அரசு அவரைப் பாராட்டி ரூபாய் 50,000 சன்மானம் வழங்கியுள்ளதற்கும் வடுவூர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மயூர் ஷெல்கேவிற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வடுவூர் மக்கள் தங்களுடைய விருப்பத்தையும் மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் பணிபுரியும் ரயில்வே ஊழியரின் துணிச்சலான செயலை பாராட்டி மன்னார்குடியின் வடுவூரில் பேனர் வைக்கப்பட்டுள்ளதை பிற கிராமத்தினர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.