(Source: ECI | ABP NEWS)
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: மீண்டும் பவுத்தி பட்டாமுறையை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நில நிர்வாக ஆணையம் கடிதம் எழுதியுள்ளார்.

TN Land Registration: பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, நில நிர்வாக ஆணையம் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
”பவுத்தி பட்டா” என்றால் என்ன?
நில உரிமையை கொண்டாடுவதில் பட்டா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாகவே அந்த ஆவணத்தை பெறுவதற்கான வழிமுறைகளும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. முன்னர் ஜமாபந்தி நடக்கும்போது, கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்படும். வருவாய் கிராமத்தில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் நடைமுறை இருந்தது. இது பவுத்தி பட்டா மாறுதல் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களாலும், வேலைப்பளுவாலும், பவுத்தி பட்டா மாறுதல் செயல்முறையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, அதை மீண்டும் செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்:
மாவட்ட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொது மக்கள், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பார்க்கலாம். பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. அவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது உரிமம் பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க, உரிய ஆவணங்களுடன், இ - சேவை மையங்கள் அல்லது தமிழ் நிலம் 'சிட்டிசன் போர்டல்' வழியாக விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள், ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.
ஆன்லைன் மூலம் பட்டா திருத்தம்
இதற்காக, நில உரிமையாளர்களின் விபரங்களை, இணையதளத்தில் மேம்படுத்த, இறந்த நில உரிமையாளர்கள், பட்டாதாரர்கள் பெயரை நீக்கம் செய்து, நடப்பு நில உரிமையாளர்கள், பட்டாதாரர் விபரங்களை, சிட்டாவில் சேர்க்க வேண்டியது அவசியம். எனவே, இறந்த பட்டாதாரர்களின் பெயர்களை நீக்கம் செய்து, தற்போதைய நில உரிமையாளர்களின் பெயரை சேர்க்க விரும்புவோர், உரிய ஆவணங்களுடன், இ - சேவை மையங்கள் வழியாக அல்லது தமிழ் நிலம் சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம். இதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். உரிய ஆவணங்கள் இணைக்காததால், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
”ஆவணங்கள் அவசியம்”
இதை தவிர்க்க, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இ - சேவை மைய பணியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அவர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியலை, இ - சேவை மையம் வெளியே ஒட்டி வைக்க வேண்டும். பவுத்தி பட்டா மாறுதல் தொடர்பாக, ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காலதாமதமின்றி உரிய ஆணைகள் பிறப்பிக்க, தாசில்தார்களுக்கு உத்தரவிட வேண்டும்” என பவுத்தி பட்டா மாற்றம் தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேவையான ஆவணங்கள்:
பட்டாவில் இறந்தவர் பெயரை நீக்க, இறப்புச் சான்றிதழ், பட்டா சான்றிதழ்,குடும்ப அட்டை நகல்,வருமான வாரிசு சான்று (வாரிசு இல்லாத பட்சத்தில்) மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும். சொத்து விற்பனை பட்டா பெயர் மாற்றமாக இருந்தால், பழைய மற்றும் புதிய உரிமையாளர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.





















