நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய சூழலில், ஆளுநர் ரவி 7-ஆம் தேதி டெல்லி பயணம்...!
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக வரும் 7-ஆம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை நேற்று தகவல் தெரிவித்தது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர் வரும் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ள சூழலில், அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது டெல்லி பயணத்தின்போது நீட் விலக்கு மசோதா குறித்து பல்வேறு முக்கிய சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் நீட் நுழைவுத் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்தாண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றினர். இந்த மசோதாவை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றிய மசோதாவை, அதற்கு பிறகு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலே இருந்தார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், ஆளுநர் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியே நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்காக, நேற்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கமிட்டதுடன், வெளிநடப்பு செய்தனர். இன்று மாநிலங்களவையிலும் ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பிறகு தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்