மகாவீர் நிர்வானா... மகாவீர் ஜெயந்தியா... இறைச்சிக்கு எழுந்த சர்ச்சை! டாஸ்மாக் தப்பியது எப்படி?
இதுவரை தமிழ்நாட்டில் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகள் அடைக்கப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் பண்டிகை நாளை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த முறை தீபாவளி பண்டிகையை மக்கள் யாரும் பெரியளவில் கொண்டாடவில்லை. இம்முறை கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் தீபாவளியை சற்று விமர்சையாக கொண்டாட மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபாவளி பண்டிகை அன்று மகாவீர் நிர்வான் சேர்ந்து வருகிறது என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை மாநாகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், “சென்னை பெருநகர மாநாகராட்சிக்கு உட்பட்டு இயங்கும் இறைச்சி கடைகள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வானை முன்னிட்டு இறைச்சி விற்க கூடாது. மேலும் இந்த உத்தரவை அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் மற்றொரு அரசாணை வெளியானது. அதில், “ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நிர்வான் தமிழ்நாட்டில் இறைச்சி கடைகள் அடைக்கப்படுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இம்முறை தீபாவளி மற்றும் மகாவீரர் நிர்வான் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கை மற்றும் பொதுமக்களின் உணர்வை மதிக்கும் வகையில் தீபாவளி நாளன்று தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி இல்லை” என்று கூறியிருந்தது.
ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் இந்த அரசாணையில் மகாவீரர் நிர்வான் நாளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இறைச்சி கடைகளை போல் மது கடைகளுக்கு ஏன் எந்த விதமான கட்டுபாடுகள் விதிக்கப்படவில்லை. என்ற கேள்வி எழுகிறது. இந்தாண்டு மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை வந்தது. அந்த நாளன்று இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். அப்படி இருக்கும் போது இம்முறை மது கடைகளுக்கு ஏன் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த இரண்டு அரசாணைகளும் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சிலர் மதுக்கடைகளுக்கு ஒரு நடைமுறை இறைச்சி கடைகளுக்கு ஒரு நடைமுறையா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!