Special Leave: விட்டாச்சு லீவு! இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் - எத்தனை பஸ்?
வார இறுதிநாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறை நாட்கள் என்பதால் இன்று முதல் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பில் சமீபகாலமாக வாரந்தோறும் இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
காலாண்டு விடுமுறை:
இந்த சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்றுடன் காலாண்டுத் தேர்வு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, வரும் அக்டோபர் 6ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு, சுற்றுலாக்களுக்கு மற்றும் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சனி, ஞாயிறு மற்றும் காலண்டு விடுமுறை சேர்ந்து வருவதால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் இருந்து வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று முதல் சிறப்பு பேருந்துகள்:
இதன்காரணமாக, சென்னையில் இருந்து இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மொத்தம் 395 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சனிக்கிழமையான நாளை 345 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்தும் வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளையும் கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகளவில் பேருந்துகளில் கூட்டமாக காணப்படும் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு:
வார விடுமுறையுடன் காலாண்டு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தனியார் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் வழக்கத்தை விட தங்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியருப்பது பயணிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பேருந்துகளில் பயணம் செய்ய இன்று மட்டும் 12 ஆயிரத்து 691 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை பயணிக்க 5 ஆயிரத்து 186 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் வெளியூர் செல்வதற்காக 7 ஆயிரத்து 790 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் சென்னை உள்பட முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.