Kachchatheevu: கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழக மீனவர்கள்! களையிழந்த அந்தோணியார் ஆலய வைபவம்!
புகழ்பெற்ற கச்சத்தீவு திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்ததால் அந்தோணியார் கோயில் திருவிழா களையிழந்தது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கச்சத்தீவு திருவிழா:
இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று பிப்.23ம் தேதி தொடங்கி இன்று முடிவடைகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று மாலை 4 மணிக்கு கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குதந்தை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து சிலுவை பாதை, திருப்பலி, தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு:
இதனிடையே கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 75 விசைப்படகுகளிலும், 24 நாட்டுப்படகுகளிலும் செல்ல மொத்தம் 3 ஆயிரத்து 265 பேர் ராமேஸ்வரத்தில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இலங்கையில் இயற்றப்பட்ட புதிய திட்டத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினால் 5 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப்போவதாக மீனவர்கள் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு நாட்டு படகு, விசை படகு என எதுவும் இயக்கப்படவில்லை. பொதுவாக கச்சத்தீவு திருவிழாவிற்கு பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தவிர்த்து 80 சதவீதம் பேர் ராமேஸ்வரத்தில் இருந்து தான் வருவார்கள் என கூறப்படுகிறது. நேற்று படகு இயக்கப்படாததால் பிற பகுதிகளில் இருந்து வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ா
வெறிச்சோடிய திருவிழா:
மேலும், அந்தோனியார் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும் நிலையில் நெற்று ராமேஸ்வர மீனவர்கள் இந்த திருவிழாவை புறக்கணித்ததால் கலை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்தியர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளது இலங்கையில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.