Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!
மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், சென்னையில் பெரியளவு மழை பெய்யவில்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
பெரிய மழை இல்லை:
“இப்போது சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பெரிதாக ஏதும் வரவில்லை. சமூக வலைதளங்களில் செய்யப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீரை அகற்ற சக்தி வாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் எந்த பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை.
கடந்த முறையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இந்த முறையும் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.மழைநீரைப் பொறுத்து கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். செங்கல்பட்டு 1.06 செ.மீட்டர் மழை, திருவள்ளூரில் 0.6 செ.மீட்டர் மழை, காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
தயாராக உள்ளோம்:
முதலமைச்சர் உத்தரவின்படி கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தோம்.1499 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மழைக்கான பணியை காட்டிலும் தற்போதைய மழைக்கு பணியை அதிகமாக்கி உள்ளோம். கூடுதல் மோட்டார்கள் ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளது. சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதையை மட்டுமே மூடப்பட்டுள்ளது. அதுவும் ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்டுள்ளது. கால்வாய்களில் தூர்வாரும் பணி சீக்கிரம் முடிக்கப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலே மழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தொடர்ந்து தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில பெய்யும் மழையின் அளவை விட தற்போதைய மழையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.