’ரொம்ப சந்தோஷம்யா, சந்தோஷம்’ முதல்வரிடம் தொலைபேசியில் நெகிழ்ந்த பயனாளி...!
ஒரு நாள் முதல்வர் போல, ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டிவரும் நிலையில், கோரிக்கை மனு அளித்த ஒருவருக்கு அவரே தொலைபேசியில் அழைத்து உங்கள் குறை தீர்ந்ததா என கேட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது...!
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் முதல்வன் திரைப்பட ஒருநாள் முதல்வர் கணக்காக ஒவ்வொரு நாளிலும் அவர் மக்களின் குறைகளை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பரவலாக பாராட்டை பெற்று வருகிறது. ஏன், எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கூட ஆட்சியின் செயல்பாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்நாள் கையெழுத்திட்ட 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் மூலம் ஆயிரக்கணக்கில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மனுக்கள் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திடீரென அந்த துறையின் கதவுகளை திறந்து அலுவலகம் உள்ளே சென்ற முதல்வர், பயனாளி ஒருவருக்கு போன் செய்கிறார். ”ஹலோ மேரிங்களா, நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன்” என்று இவர் சொல்ல அந்த பக்கம் பேசும் மேரியோ முதல்வரே நம்மிடம் பேசுகிறார் என்ற மகிழ்ச்சியில் ஆமாய்யா, ஆமாய்யா நான் மேரிதான் பேசுகிறேன் என்கிறார். மீண்டும் அவரிடம் பேசும் முதல்வர் “ உங்க கோரிக்கை என்ன ஆச்சும்மா” என கேட்கிறார் “ பென்ஷன் ஆர்டர் காப்பிய வந்து கையிலேயே கொடுத்துட்டாங்க, ரொம்ப சந்தோஷம் அய்யா, ரொம்ப சந்தோஷம்” என அந்த உரையாடல் முடிகிறது.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
— M.K.Stalin (@mkstalin) May 28, 2021
மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து - சில பயனாளிகளிடமும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். pic.twitter.com/EGRPWBhlMZ
இப்படியாக, சாமானிய மனிதர்களின் குறைகளை கூட சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சொல்லும் தலைமைச் செயலக ஊழியர்கள், முதல்வரின் செயல்பாடுகளால் கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழகம் நிச்சயம் மீண்டும் புதியதோர் தமிழ்நாடு மலரும் என உறுதியாக சொல்கின்றனர்.
தேர்தல் பரப்புரையின் போது ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் பெட்டிகளில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்திருந்தார் மு.க.ஸ்டாலின், அதன்படி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் முதலில் போட்ட கையெழுத்துகளில் ஒன்று, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கென்றே தனித்துறை அமைத்தது, அதற்கென ஷில்பா பிரபாகர் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஊழியர்களை நியமித்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற பிரத்யேக திட்டம் மூலம் மக்களின் மனுக்களுக்கு தீர்வு கண்டு வருகிறார் முதல்வர்.