விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்கள்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!
சாலை விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
![விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்கள்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்! tamilnadu cm stalin announces relief fund of Rs 2 lakh for who lost their lives of road accident விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்கள்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/8a89ea42073f95cc213a96ea836efbf11689507133832102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் அருகே சாலை விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சாலை விபத்து அல்லது இதர விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்பட்டால் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் விழுப்புரம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியது. அதில், லட்சுமி (வயது 45) மற்றும் கோவிந்தம்மாள் (வயது 50) ஆகியோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மற்றோரு பெண்ணான கெங்கையம்மாள் (45) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (வயது 45), கேமலம் (வயது 46), பிரேமா (வயது 45) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற திருமதி. நாயகம் அவர்களுக்கு 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி அளிக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதோடு, ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)