MK Stalin: அமீரகம் முடிந்தது; அடுத்தது டெல்லிக்கு படையெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அவர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பெருமித மடல். வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும்போதுதான் பெரும் மகிழ்ச்சி கொள்ளும். பாடுபட்டுச் சேகரித்து வந்த இரையைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்தான் பறவைக்குப் பேருவகை!
அதுபோல, 5 நாட்கள் அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப் பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து - திணறி - திக்குமுக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்புகனிந்த மரியாதையைப் பெற்று, துபாய் - அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன்!
பள்ளி விழாவில் கலந்துகொண்டு கைத்தட்டல்களையும் பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெறுகிற குழந்தை, வீடு திரும்பி அவற்றை தாயின் கைகளில் அளித்து, அம்மாவின் அன்பு முத்தங்களைப் பெற்று மகிழ்வது போல, 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய, 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக, தாயுள்ளம் கொண்ட தமிழ்நாட்டு மக்களிடம் தெரிவித்து மகிழ்ந்தேன்.
முதலமைச்சர் என்ற முறையில் முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அரசியலுக்காக ஒருசிலர் அதை ஏற்காமல், அழுக்காறு மேலிட்டு, வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பினாலும், அவர்களின் மனசாட்சிக்கும் உண்மை நிலவரம் நன்றாகவே தெரியும். வெற்றியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டால், பிறகு எப்படி அவர்கள் அரசியல் கடை போட்டு, கூவிக் கூவி பிழைப்பு நடத்த முடியும்?
அவர்களால் பாராட்ட முடியாவிட்டாலும், நடுநிலை பத்திரிகைகள், ஊடகங்கள் பாராட்டுகின்றன. துபாயில் வெளியாகும் ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆங்கில ஊடகங்கள் பலவும் இந்தப் பயணத்தைப் பதிவு செய்துள்ளன. அமீரகத்தில் மேற்கொண்ட 5 நாள் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தினத்தந்தி ஏடு படம் பிடித்துக் காட்டும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.
“இதுவரை எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும், தலைவர்களும் துபாய்க்கு வந்தபோதுகூட இல்லாத வரவேற்பு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சருக்குக் கிடைத்திருப்பது அனைவரையும் பிரமிக்கச் செய்துள்ளது. நாட்டின் தலைவர்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பது வியக்க வைத்திருக்கிறது.
இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்பதைவிட, இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குவதே உங்களில் ஒருவனான எனது இலக்கு. அதற்கான பயணம் அயர்வின்றித் தொடரும், தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வகுத்தளித்த இலட்சியப் பாதையில்! அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தின் தலைநகராம் புதுடெல்லியை நோக்கி அமைகிறது. டெல்லிக்குச் சென்று, மார்ச் 31 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.
தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களையும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன். தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்ங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ஆம் நாள் திறக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நமது கழகத்திற்கு அலுவலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. காலம் கனிந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அறிவாலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
அறிவாலயம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, சென்னையில் உள்ள கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம்தான். ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதன்முதலில் தலைமை நிலையமாக அமைந்தது, சென்னை இராயபுரத்தில் உள்ள அறிவகம். அதன்பின், தேனாம்பேட்டை அன்பகம். பிறகு, அரசினர் தோட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, கழக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க அரசு நம்முடைய கழக அலுவலகத்தை சூறையாடுவதுபோல பொருட்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டது.
ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தலைவர் கலைஞர் மீது அளவற்ற மரியாதை கொண்டவருமான திருமதி. சோனியா காந்தி அம்மையார் அவர்கள், மேற்கு வங்காள முதலமைச்சர் செல்வி.மமதா பானர்ஜி அவர்கள், இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இந்திய ஒன்றிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல்வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது. உடன்பிறப்புகளாகிய உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்.