CM MK Stalin: "கோயில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் துணை நிற்கும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
திராவிட மாடல் கோயில் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றுபவர்களின் வளர்ச்சிக்கும் எப்போதும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவாதம் அளித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாவது படை வீடான பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, " உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள்! "செயல்பாபு' என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு, அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு, இந்தத் துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.
அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு:
"கோயிலை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நான் அறநிலையத் துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால், கோயிலிலேயே குடியிருக்கின்ற ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்திருக்கிறார். நாள்தோறும் ஆன்மீகப் பெரியவர்கள் அறநிலையத் துறையையும், அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் விரும்பும் ஆட்சி:
கலைஞர் ஆட்சியில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டினார்கள். இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அடையாளம்தான், பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது. அந்த வகையில், பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டவுடனே, அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வருகின்ற பணிகளின் பட்டியலை தரச் சொல்லி, அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன்.
அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் நலனை மனதில் வைத்து, கோயில் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களில் 789 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில் 277 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது. 69 முருகன் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது.
பக்தர்களுக்கு அன்னதானம்:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற 4000 மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது. பழனி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்ததை 4000 ரூபாயாக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஊக்கத்தொகை:
2024-ஆம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணத்துக்கு 1000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுநாள் வரை 813 நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள். அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லாத முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தவில், நாதஸ்வரக் கல்லுாரி, அர்ச்சகர் மற்றும் வேத ஆகம படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் பள்ளிகளில் ஊக்கத்தொகையாக 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பணிநியமன ஆணை:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மறைவெய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவரை, திருக்கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 1,298 பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கார்கள்.
திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஊக்கத்தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 1,298 பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது - இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
திராவிட மாடல் துணை நிற்கும்:
ஏதோ திடீரென பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.
திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். கோயில்களின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றுபவர்களின் வளர்ச்சிக்கும் திராவிட மாடல் துணை நிற்கும்.
தமிழ் முதன்மை பெற வேண்டும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும், முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்தச் சட்டம்தான். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும்! திருக்கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்! அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! அறத்தால் உலகம் நன்றாகும்!"
இவ்வாறு அவர் பேசினார்.