Pongal 2023: தமிழ்நாடு வாழ்க: தமிழர் தரணியாள, உழைப்பை வணங்குவோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
![Pongal 2023: தமிழ்நாடு வாழ்க: தமிழர் தரணியாள, உழைப்பை வணங்குவோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை.. tamilnadu cm mk stalin said pongal greetings to people Pongal 2023: தமிழ்நாடு வாழ்க: தமிழர் தரணியாள, உழைப்பை வணங்குவோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/677db9e4db34cc327f1db897efa17d641673750928179572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவே வீடுகளில் வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கலை வரவேற்றனர். தொடர்ந்து அதிகாலையிலேயே எழுந்து புனித நீராடி புத்தாடை அணிந்து விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்பானைகளில் பொங்கலிட்டு படைத்து வழிபட்டனர்.
மேலும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குழை, பனங்கிழங்கு, கரும்பு வைத்து பொங்கல் பொங்கி வந்தததும் “பொங்கலோ பொங்கல்” என உற்சாக குரலிட்டு மக்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசும் மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பை அறிவித்தது.
வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) January 15, 2023
சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!#தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள! pic.twitter.com/8hEZTUvwip
அதில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஆகியவை இடம் பெற்றிருந்தது. பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள! என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், “தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்பம் பொங்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழர் திருநாள் இது..பொங்கல் திருநாள் இது.. உழவர் திருநாள் இது. உழவே தலை என வாழ்ந்த உழைப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றியவர்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தை நம்முடன் சேர்த்த வேட்டை சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு, மற்ற உயிரினங்கள் என அனைத்திற்கும் சேர்த்து கொண்டாடப்படும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா. கற்பனை கதை இல்லாத பண்பாட்டு திருவிழா.
வானம் கொடுத்தது..பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலம் நாம் உலகிற்கு உணர்த்துகிறோம். ஏழை, பணக்காரர்,உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் கொண்டாடப்படும் சமத்துவ பெருவிழா தான் பொங்கல் பண்டிகை” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)