CM Stalin: 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின்
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கரூர் அரவக்குறிச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மொத்தம் ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மழை பெய்வதால் மண் குளிர்ந்துள்ளது. மண்ணை காக்கு விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கியுள்ளதன் மூலம் எனது மனமும் குளிர்ந்துள்ளது என்றார் ஸ்டாலின்.
விவசாயிகளுக்கு 50ஆயிரம் கூடுதல் மின்இணைப்புகள் வழங்கக்கூடிய மிகச் சிறப்பான திட்டத்தின் தொடங்க விழா என்று சொல்வதா அல்லது மாபெரும் விவசாயிகள் மாநாடு என்ற அழைப்பதா?
அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் முத்திரையை பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதித்த நிகழ்ச்சியில் முதல்வர் என்கிற வகையில் பங்கேற்பது நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.
தமிழக அரசின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய ஒரு நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
இந்த விழா மூலமாக 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே 1 லட்சம் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குறுகிய காலத்திற்குள் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்ததில்லை. நமது அரசு தான் செய்து காட்டியது.
இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியது கிடையாது.
எனவேதான் இந்த நாளை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்று கூறினேன். நான் வந்ததும் மேடையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை பார்த்தேன். அதில் பயனாளிகளின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. குறிக்கோள் வைத்து செயல்படுபவர் செந்தில் பாலாஜி. ஒரு இலக்கை தனக்குதானே வைத்துக் கொண்டு அதை முடித்துக் காட்டுபவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அவருக்கு உதவிய அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். பயனடையும் விவசாயிகள் மூலம் நமக்கு எவ்வளவு உணவுப் பொருட்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தத் தருணத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூருகிறேன்.
இந்தியாவிலேயே முதல் முறையாக உழவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது கலைஞர் தான். முந்தயை ஆட்சிக் காலத்தில் மொத்தம் 2.20 லட்சம் வேளாண் மின் இணைப்புகள்தான் வழங்கப்பட்டன. ஆனால், நாம் 15 மாத ஆட்சிக் காலத்தில் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலமாக தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது. எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அதிகளவில் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள் தான் இவை. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் மக்களுக்காக போட்டிப் போட்டிக் கொண்டு உழைத்து வருகின்றன. திட்டங்களைத் தீட்டி வருகின்றன. தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.