CM Stalin Delhi Visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி விசிட்...! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க நாளை டெல்லி செல்ல உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க நாளை டெல்லி செல்ல உள்ளார்.
முதலமைச்சர் டெல்லி பயணம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. குடியரசு தலைவர் உடனான சந்திப்பிற்கு பிறகு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
ஸ்டாலினும் - டெல்லி பயணமும்:
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க, சில முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் டெல்லி சென்று இருந்தார்.
அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக டெல்லி செல்லாமல் இருந்த ஸ்டாலின், நாளை டெல்லி செல்கிறார். ஏற்கனவே, சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து குடியரசு தலைவரிடம் நேரடியாக வலியுறுத்த 4 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
ஆளுநர் டெல்லி பயணம்:
இதனிடையே, 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிடோரை சந்திப்பர் என கூறப்படுகிறது. அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ உள்ளிட்டு விவகரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஈபிஎஸ் டெல்லி பயணம்:
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று டெல்லி செல்கிறார். அப்போது தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட ஆளும் திமுக மீதான பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என, தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஒரே நேரத்தில் டெல்லியில் முகாமிடுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.