Neet | நீட் தேர்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது யார்? விஜயபாஸ்கருடன் நடந்த காரசார விவாதம்..
நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது யார்? என்று விஜயபாஸ்கர் கேட்க, செல்வப்பெருந்தகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் எனும் சொல், நீட் எனும் தேர்வு கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றார்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்கு புறம்பானதை பேசுவதாக குற்றம்சாட்டினார். அப்போது, எழுந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சில கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு எனும் விதையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார் என்றுதான் உறுப்பினர் விஜயபாஸ்கர் கூறினார் என்றார்.
அவையில் மாறி, மாறி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அப்போது, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர் அவைத்தலைவர் அப்பாவு இந்த கூட்டத்தொடர் நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாகதான் என்றும், நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்று கிடையாது என்றும் கூறினார். இதையடுத்து, இந்த காரசார விவாதம் முடிவுக்கு வந்தது. பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு விமர்சனங்களைத் தாண்டி, கருத்துக்களைத் தாண்டி தர்க்கரீதியாக அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
முன்னதாக, சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் சிறப்புக்கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழர் வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் ஜவாஹிருல்லா, புதிய பாரத சட்டமன்ற கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, வி.சி.க. சட்டமன்ற தலைவர், மார்க்சிஸ்டு சட்டமன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற தலைவர். பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஆகியோர் நீட் விலக்கு பெற அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்போம் என்று பேசினர்.
பா.ஜ.க. உறுப்பினர்கள் நான்கு பேர் மட்டும் நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்