Senthil Balaji: ’’செந்தில் பாலாஜி பேச்சை எவ்விதத்திலும் ஏற்க மாட்டேன்; தமிழ்நாட்டை முதல்ல பாருங்க’’- தமிழிசை விளாசல்!
செந்தில் பாலாஜி சொல்வதை எந்த விதத்திலும் ஏற்க மாட்டேன். கருத்து சுதந்திரம் பற்றிப் பேசிய ஸ்டாலின், கருத்துக் கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கிறார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பேரணியில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசே காரணம் என்று தவெகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் இதற்கு தமிழக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தன் மீது சுமத்தப்பட்ட செருப்பு வீச்சு, ஆம்புலன்ஸ்கள் வருகை, கரண்ட் கட், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் என அனைத்து விமர்சனங்களுக்கும் அவர் பதில் அளித்தார். எனினும் இதை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“செந்தில் பாலாஜி சொல்வதை எந்த விதத்திலும் ஏற்க மாட்டேன். கருத்து சுதந்திரம் பற்றிப் பேசிய ஸ்டாலின், கருத்துக் கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
தவெகவுக்கு நேரம் கொடுப்பது, இடம் கொடுப்பதில் காவல் துறை ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் இருந்திருக்கிறது. தடுத்திருக்கக் கூடிய மரணங்கள் இவை. என் மனது பதைபதைக்கிறது.
தமிழ்நாட்டை முதலில் பாருங்கள்
நம் மாநிலத்தில் எது நடந்தாலும் கும்பமேளாவைப் பாரு, மணிப்பூரைப் பார் என்பதா? காஷ்மீரை நோக்கி கேள்வி கேட்பதா? இறந்தது தமிழர்கள். தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லையா உங்களுக்கு? தமிழ்நாட்டை முதலில் பாருங்கள். துபாய் போய்விட்டார் துணை முதல்வர். வந்தார், பார்த்தார், போய்விட்டார். நிர்வாகத்தில் இருப்போர் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.
நாங்கள் அமைத்துள்ள குழுவிடம், மக்கள் நேரடியாகச் சொல்லிவிடுவார்கள் என்று உங்களுக்கு பயம். எத்தனை நாள் நீங்கள் வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்?“.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.






















