Senthil Balaji Press Meet: செருப்பு வீச்சு, கரண்ட் கட், பாட்டிலுக்கு 10 ரூபாய்- தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில்சொன்ன செந்தில் பாலாஜி!
என்னை குறித்து அவர் பேசும்போதுதான், செருப்பு வீசப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் விஜய் பேச ஆரம்பித்து 6ஆம் நிமிடத்துக்கு உள்ளேயே செருப்பு வீசப்பட்டது.

கரூரில் செருப்பு வீசல், கரண்ட் கட், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் என தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பேரணியில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசே காரணம் என்று தவெகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
’’கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த துயர சம்பவம் மிக கொடுமையானது, எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
கரூர் சம்பவத்தை அரசியலாக பார்க்கவில்லை. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். இருப்பதிலேயே வேலுச்சாமிபுரத்தில்தான் அதிகப்பேர் கூட முடியும் என்பதால், அந்த இடம் வழங்கப்பட்டது.
விஜய் சென்ற ஊர்களில் எல்லாம் பாதிப்பு
கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூரில் மட்டுமல்ல, விஜய் சென்ற ஊர்களில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் பேருந்துக்கு உள்ளே போகாமல், முன் சீட்டில் அமர்ந்திருந்தால் இவ்வளவு கூட்டம் ஏற்பட்டிருக்காது.
சம்பவத்தின்போது கட்சி அலுவலகத்தில்தான் இருந்தேன். உடனே 7.47 மணிக்கு சம்பவ இடத்துக்குச் சென்றேன். தவெக மற்றும் 108 ஆம்புலன்ஸ்தான் கூட்டத்துக்குள் வந்தவை. கட்சி ஆம்புலன்ஸ்கள் எவையும் வரவில்லை. வீடியோவில் இதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
செருப்பு வீச்சு
என்னை குறித்து விஜய் பேசும்போதுதான், செருப்பு வீசப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் விஜய் பேச ஆரம்பித்து 3ஆம் நிமிடத்தில் என்னைக் குறித்துக் கூறினார். ஆனால் 6ஆவது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது. அவரின் கவனத்தை ஈர்க்க, அவ்வாறு நடந்திருக்கலாம். மீண்டும் விஜய் என்னைப் பற்றி 16ஆவது நிமிடத்தில்தான் பேசினார்.
அரசு மின்சாரத்தை நிறுத்தவில்லை
இடப் பற்றாக்குறையால் தவெக தொண்டர்களில் சிலர், ஜெனரேட்டர் அறைக்குள் சென்றபோதுதான், அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விளக்குகள் அணைந்தன. அப்போதும் தெரு விளக்குகள் எதுவும் அணைக்கப்படவில்லை, அரசு மின்சாரத்தை நிறுத்தவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்திலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதற்காக, 10 ரூபாய் பழனிசாமி என்று ஈபிஎஸ்ஸை அழைக்கலாமா?’’
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.






















