(Source: ECI/ABP News/ABP Majha)
Duraimurugan on Mekadatu Dam | கர்நாடகா மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கமுடியாது - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைப் போக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த தமிழக முதல்வர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார். சம்பா குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்.
அதேபோல, காவிரி டெல்டா பகுதிகளில் தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இதை கண்காணிக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது.
திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவான மாவட்டம் என்பதால் இங்கு இன்னும் சில துறைகள் வர வேண்டும். படித்த இளைஞர்களுக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்திட புதியதாக தொழிற்பேட்டை அமைக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஆலோசித்து விரைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை கட்டாயம் கொண்டு வரப்படும். அதேபோல, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்படும்” எனக் கூறினார்.
தமிழகத்தின் மிகப்பெரும் விளைச்சலைத் தரும் டெல்டா மாவட்டங்கள் தங்களது பயிர்சாகுபடிக்காக காவிரி நீரையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழக அரசும் தனது தீவிர எதிர்ப்பை காட்டி வருகிறது.