கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
TN Weather Update (5.11.2025): தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சென்னை புறநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மியான்மர் - வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16% கூடுதல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 16% கூடுதலாக பெய்துள்ளதாகவும், இயல்பான நிலையில் 201.9 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 234.5 மி.மீ., மழை பெய்துள்ளதாகவும் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளதாகவும் இயல்பான நிலையில் 325.4 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 354.9 மி.மீ., மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.





















