TN Weather Forecast | மீண்டும் மீண்டுமா? 24 மணிநேரத்தில் புதிய புயல்? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
Tamil Nadu Weather Forecast Till December 06: சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
![TN Weather Forecast | மீண்டும் மீண்டுமா? 24 மணிநேரத்தில் புதிய புயல்? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Tamil Nadu Weather forecast till december 06 New Cyclone to form in 24 hours- meteorological department chennai TN Weather Forecast | மீண்டும் மீண்டுமா? 24 மணிநேரத்தில் புதிய புயல்? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/3133010d741864bc04dab5c415262c52_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிஷா பகுதியில் கரையை வரும் 4 ஆம் தேதி கரையை நெருங்க கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
02.12.2021: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
03.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஷா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
04.12.2021: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிஷா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
05.12.2021: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஷா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
06.12.2021: நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)