TASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!
‛போலி மது வராமல் தடுக்க டாஸ்மாக் திறந்தோம்,’ என முதல்வர் சொல்ல, ‛கஜானா காலியாகிவிட்டது அதனால் திறந்தோம்,’ என அமைச்சர் சொல்ல... இறுதியாக எதற்காக திறக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறியது. நேற்று ஒரே நாளில், ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலையால் ஊரே அடங்குங்கள் என ஊரடங்கு போடப்பட்டது. காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த வரிசையில் டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு போடப்பட்டது. வழக்கமாக கோடிக்கணக்கில் குடித்துத்தள்ளும் மதுக்குடிப்போர் இந்த கொரோனா ஊரடங்கு இடைவெளியில் திண்டாடித்தான் போகின்றனர். சில நாட்கள் அடக்கமாக இருக்கும் போதை ஆசாமிகள் சிலர், பின்னர் போதைக்காக உயிருக்கு ஆபத்தான விஷயங்களையும் கையில் எடுத்தனர். பெயிண்ட் வார்னிஷ், இருமல் மருந்து என போதைக்காக அவர்கள் எல்லையை கடந்தனர்.
சிலர் டாஸ்மாக் சுவரை பதம் பார்த்தனர். இன்னும் சிலர் யூடியூப் பார்த்து வீடுகளிலேயே காய்ச்சத் தொடங்கினர். நாளாக நாளாக நிலைமை கைமீறி போய்க்கொண்டு இருக்க மறுபக்கம் மூடிய கடை மூடியதாகவே இருக்கட்டும், வேண்டாம் டாஸ்மாக் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே வாரவாரம் ஊரடங்கில் தளர்வில் கொண்டுவரப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நோய் தோற்று அதிகமாக பரவி வரும் 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த மதுக்குடிப்போரால் வசூலை வாரிக்குவித்துள்ளது டாஸ்மாக்.
சில வாரங்களுக்கு பிறகு டாஸ்மாக் நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில், ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னையில் ரூ.42.96 கோடிக்கும், சேலத்தில் ரூ.38.72 கோடிக்கும் , திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. ஒரே நாளில் நூறு கோடியை தாண்டினாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மண்டலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில மாவட்டங்களிலும் டாஸ்மாக் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் திறந்தால் டாஸ்மாக் புதிய வரலாறு பதிக்கும் என்றே தெரிகிறது. வசூலில் வரலாறு பதிப்பது ஒருபுறம் என்றாலும், டாஸ்மாக் வேண்டாம் என தொடர்ந்து எழும் குரல்கள் வெளியே கேட்பதே இல்லை. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை என மனம் குமறுகின்றனர் பலர். பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் டாஸ்மாக் திறந்தது ஏன் தெரியுமா என்று விளக்கம் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழகத்தை சீரழித்துவிடக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்” என்றார்.
ஆனால் முதலமைச்சரின் இந்த விளக்கத்தை பல்வேறு தரப்பினரும் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பை தடுக்க மதுக்கடைகளை திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது என்ற பதிவிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். கள்ள மது, டாஸ்மாக் என இரு தரப்பு வார்த்தைகளால் விவாதம் செய்துகொண்டிருக்கும் நேரம் குறுக்கே வந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ‛கஜானாவில் காசு இல்லை, அதனால்தான் டாஸ்மாக் திறந்தோம்,’ என சொல்லிவிட்டு சென்றுள்ளார். “கொரோனா தொற்று நோய் பரவலின் தாக்கம் குறைந்து உள்ளது. அதனால் மது கடைகளை திறந்து உள்ளோம். தமிழ்நாட்டின் நிதி நிலையை கடந்த ஆட்சி மோசமாக விட்டு சென்றுள்ளது. அதை சீர் செய்யும் நோக்கிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து உள்ளன” என்றார்.
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என கொடிப்பிடித்த கடந்த ஆட்சியின் எதிர்க்கட்சி, இந்த முறை ஆட்சியில் அமர்ந்துகொண்டே டாஸ்மாக்கை திறந்துள்ளது. கடந்த முறை போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் வியாபாரம் செய்த ஆளும் கட்சி இந்த முறை எதற்கு டாஸ்மாக்? என கேள்வி எழுப்புகிறது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் டாஸ்மாக் விவகாரத்தில் அரசியலை மட்டுமே கையில் எடுப்பதாகவும், தங்களின் மனநிலை புரிவதில்லை என்றும் புலம்புகின்றனர் டாஸ்மாக்கை மூடகோரி குரல் எழுப்புவோர். எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுக்க முடியாது. திடீரென அனைத்து டாஸ்மாக்கையும் மூடுவது அரசுக்கும் சரி, மதுக்குடிப்போருக்கும் சரி நடைமுறையில் பல சிக்கல்களை உண்டாக்கும். அதனால் படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவதுதான் நடக்கக் கூடிய காரியம் என நடைமுறை பேசுகின்றனர் சிலர். மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பதை அரசுக்கும், மக்களுக்கும் தெரியாமல் இல்லை. அதற்கான முன்னெடுப்பை அனைவருமே கையிலெடுக்க வேண்டும். அதுவே டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடும் வழி.
கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!