(Source: ECI/ABP News/ABP Majha)
Cauvery River: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு எம்.பிக்கள் சந்திப்பு..
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது ஒருபக்கம் இருக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.
இதனிடையே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் கர்நாடாகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை குடிநீர் தேவைக்காக நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும், தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலமாக காவிரி மேலாண்மை ஆணையம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மேலும் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இப்படி இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அறிவுரைப்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை திறந்துவிடவும், இது தொடர்பாக மத்திய அரசு வலியுறுத்தவும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பிக்கள், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சி தரப்பில் ஜோதிமணி, அ.தி.மு.க. தரப்பில் தம்பிதுரை, சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் நடராஜன், மதிமுக கட்சி சார்பாக வைகோ, விசிக திருமாவளவன், பாமக அன்புமணி, தாமக ஜி.கே வாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நவாஸ்கனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.