Cauvery: கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தையா? பிரச்சினையை முதலில் இருந்து தொடங்குவதற்கு சமம் - அமைச்சர் ரகுபதி
Minister Regupathy:தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பா.ஜ.க-வை அ.தி.மு.க. பாதுகாப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே நடந்த விவாதம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பா.ஜ.க-வை அ.தி.மு.க. பாதுகாப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதன் விவரம்:
” தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பா.ஜ.க. விற்கு ஆதரவு தெரிவிக்கும் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை திருத்த வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அவரின் கருத்து ஒன்றிய பா.ஜ.க. சிந்தனையை வெளிப்படுத்துவதாக உள்ளது. பா.ஜ. பி. டீமாக அதிமுக செயல்படுகிறது. மோடி அரசை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது.
கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடினோம். I.N.D.I.A கூட்டணியில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சித்தராமையாவிடன் காவிரி விவகாரம் குறித்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கேட்டால் அதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்துவது, காவிரி விவகாரத்தின் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பதற்கு கர்நாடகா விரித்த வ்லையில் நாம் விழுவதற்கு சமமானதாகும்.
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தையா?
ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு பலன் ஏதும் கிடைக்காததால்தான் கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினால் அது பிரச்சனையை முதலிலிருந்து தொடங்குவதற்கு சமம். சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதுபோல காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடக அரசிடம் அடகு வைக்கத்தான் எடப்பாடி பழனிசாமியில் யோசனை உதவும்.
காவிரி விவகாரத்தை 2018 - முன்,பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வாங்கி தரவேண்டிய முழு பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குதான் உள்ளது. ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்ற தவறினால் அது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கையாளாத தனத்தினையும், தோல்வியையும் குறிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அரசு இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோது காவிரி தொடப்ரான நிபந்தனையை அதிமுக ஏன் வைக்கவில்லை? என்றும் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.