Weather Update: மிதமான மழையுடன் பனியும் இருக்கும்.. இந்த வாரத்துக்கு வானிலை சொல்லும் தகவல் என்ன?
தமிழ்நாட்டில் அதிகாலை நேரங்களில் பனி பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழையும் அதிகாலை நேரத்தில் பனியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் (22 மற்றும் 23 ஆம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 4, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 3, ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), நன்னிலம் (திருவாரூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கொடவாசல் (திருவாரூர்), மிமிசல் (புதுக்கோட்டை), வட்டானம் (ராமநாதபுரம்), பாபநாசம் (திருநெல்வேலி), திருப்புவனம் (சிவகங்கை), சிவகங்கை (சிவகங்கை) தலா 2, வலங்கைமான் (திருவாரூர்) 1, கடலாடி (ராமநாதபுரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), கடனா அணை (தென்காசி), சூரங்குடி (தூத்துக்குடி), தென்காசி (தென்காசி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), ஆயிக்குடி (தென்காசி), காரைக்குடி (சிவகங்கை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மதுரை நகரம் (மதுரை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22.12.2023 மற்றும் 23.12.2023: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு - லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.