Rain Alert: நெருங்கிவிட்டது வடகிழக்கு பருவமழை.. இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை (இன்று) அக்டோபர் 29-ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. அக்டோபர் வரை நீடித்தது. அபரிமிதமான அளவு பருவமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. தென்மேற்கு பருவமழைக்கு பின் வட கிழக்கு பருவ மழை தொடங்கும். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை (இன்று) அக்டோபர் 29-ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். அதன் காரணமாக,
தமிழ்நாட்டில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 28, 2022
அதேபோல், (நாளை) அக்டோபர் 30ம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
31.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.