''பிரதமரின் இதயத்தில் தமிழகத்துக்கு எனத் தனி இடம் இருக்கிறது''- முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பெருமிதம்
உலகத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். பிரதமர் மோடி குறித்தும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பேசினார்.
பிரதமரின் இதயத்தில் தமிழகத்துக்கு எனத் தனி இடம் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் நடைபெறும் உலகத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்
இதில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் அவர் பேசியதாவது:
கடுமையான சவால்கள்
''மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை உயர்த்தக் கடுமையான சவால்களை எதிர்கொண்டோம்.
பிரதமரின் இதயத்தில் தமிழகத்துக்கெனத் தனி இடம் இருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்று இலக்கு வைத்து செயல்படும் தமிழ்நாட்டு முதல்வருக்கு வாழ்த்துகள். அவ்வாறு நடந்தால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி தேவை.
நாடாளுமன்றத்தில் செங்கோல்
தமிழக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்தியாவில் தமிழகத்தின் பங்கைப் பறைசாற்றும் வகையிலும் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருக்கு எல்லோரும் எழுந்து நின்று பாராட்டுவோம்''.
இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
விரைவுப் பாதையில் தமிழ்நாடு
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, ’’பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து கொண்டிருக்கிறது. இந்த பொருளாதார மாநாட்டின் மூலம் மேலும் பொருளாதாரம் உயரும் என்று நம்புகின்றேன். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலீட்டாளர்களின் முதல் மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.
2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியை நாம் இலக்காக கொண்டுள்ளோம். முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம்
நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறும்போது, ’’இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடு, பல துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆயிரம் தொழிற்சாலைகளுடன், மிகப்பெரிய தொழில் முகமையாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஆட்டோ மொபைல், உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்து வருகிறது’’ என்று அமைச்சர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.