TN Governor RN Ravi: "தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது” - பீகார் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பீகார் மாணவர்களிடையே பேசியபோது தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என குறிப்பிட்டார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பீகார் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என குறிப்பிட்டார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான பாரதம்:
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, “ பாரதம் என்பது 1947 –ல் உருவாக்கப்படவில்லை, 2,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது. குறிப்பாக பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. ராஜாக்கள் காலம் முதல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.
தமிழ் காசி சங்கம் மற்றும் சவுராஷ்டிரா காசி சங்கம் புத்தகத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசி, சவுராஷ்டிரா இடையே இருக்கும் தொடர்பு குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு இடத்தில் இருந்து மக்கள் வேறு இடத்திற்கு எப்படி பயணம் மேற்கொண்டனர் அவர்களை எப்படி குடும்பத்தினரை போல் வரவேற்றார்கள் என தெளிவாக எழுத்தப்பட்டிருக்கும்” என கூறினார்.
பழமை வாய்ந்த தமிழ்:
தொடர்ந்து பேசிய அவர், “என் பாட்டி, அம்மா பாட்னாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். ஏனெனில் தங்கள் வாழ்க்கையில் ராமேஸ்வரம், காசி உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த காலக்கட்டத்திலும் மொழி இருந்தது. தமிழ் மொழியை தான் மக்கள் பேசி வந்தார்கள் இருப்பினும் வட இந்தியர்கள் வரும் போது அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. அதேபோல் தான் தமிழர்களும் காசி, பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இப்படிப்பட்ட இணக்கத்தால் தான் இந்தியா ஒற்றுமையாக உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த மொழி தமிழ் மொழி” என மாணவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார்.