"பாகுபலிகள் இல்ல.. ரிஷிகள், முனிவர்களே காரணம்" நாடு உருவானது எப்படி.. ஆளுநர் ரவி சொன்ன விஷயம்
"பாரதத்தில் பல ராஜாக்கள் ஆண்டு இருக்கிறார்கள். பல நிலப்பரப்புகளில் ஆண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு ராஜா ஆளவில்லை. பாரதம் ஒரு குறிப்பிட்ட ராஜாவால் ஆளப்படவில்லை" என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

பாரதம் உருவாக்கப்பட்டது ஆட்சியாளர்களாலோ, நம்மளுடைய துப்பாக்கி ஏந்திய படைகளாலோ அல்லது பாகுபலிகளாலோ அல்ல என்றும் ரிஷிகளும் முனிவர்களும் வேத காலத்திலேயே தங்களின் சிந்தனைகள் மூலம் ஆட்சி செய்தார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
நாடு உருவானது எப்படி?
சென்னை ஆளுநர் மாளிகையில் கோவா - சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, "பாரதம் பலதரப்பட்ட பன்முகத் தன்மை கொண்டது. எண்ணில் அடங்கா பன்முகத்தன்மை கொண்டது. மொழி, உணவு பழக வழக்கத்தில் பன்முகத்தன்மை, நிலங்களின் கூட பன்முகத்தன்மை கொண்டது தான் நமது அழகிய நாடு.
சுதந்திரத்திற்கு பிறகு, நமது பன்முகத்தன்மை எந்த அளவுக்கு மதிப்பு மிக்கது என்பதை நாம் மறந்து விட்டோம். இந்தியா என்ற பெயர் வந்தது 80 ஆண்டுகளுக்கு முன்பாகதான். ஆனால், பாரதம் என்பது குறைந்தது 6000 - 7000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இருக்கிறது.
"பாகுபலிகளால் உருவாக்கப்படவில்லை"
நம்ம பாரதத்தில் பல ராஜாக்கள் ஆண்டு இருக்கிறார்கள். பல நிலப்பரப்புகளில் ஆண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு ராஜா ஆளவில்லை. பாரதம் ஒரு குறிப்பிட்ட ராஜாவால் ஆளப்படவில்லை. ஆனால், கலாச்சாரம் மற்றும் பண்பாடு கொண்ட நாடாக பாரதம் இருக்கிறது.
பாரதம் உருவாக்கப்பட்டது ஆட்சியாளர்களாலோ, நம்மளுடைய துப்பாக்கி ஏந்திய படைகளாலோ அல்லது பாகுபலிகளாலோ அல்ல. நம்மளோட ரிஷிகளும் முனிவர்களும் வேத காலத்திலேயே அவர்கள் சிந்தனைகளை மூலம் ஆட்சி செய்தார்கள்.
7000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எல்லோரும் ஒரு குடும்பமாக இருந்தோம். வேதர்களும் ரிஷிகளும் நாடு முழுவதும் பாடசாலைகளை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து வந்தவர்கள் வெவ்வேறு ராஜாக்கள் கீழ் செயல்பட்டு இருக்கலாம். ஆனால், அவர்கள் வளர்ச்சி பாரதத்திற்காக இருந்தது. இதுபோல் வேற எந்த நாட்டிலும் கிடையாது.
தமிழக ஆளுநர் என்ன பேசினார்?
காசி நகரத்தை ஒரு மன்னர் ஆண்டார். ஆனால், அந்த மன்னர் அதை அவருடையது என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனென்றால், அது பாரதத்திற்கு சொந்தமானது. அதேபோலத்தான் இங்குள்ள ராமேஸ்வரமும், ராமநாத மன்னர் சேதுபதியால் ஆளப்பட்டது.
ஆனால், அங்குள்ள ராமேஸ்வரம் தன்னுடையது என்று அவரால் சொல்ல முடியாது. அவருடைய பொறுப்பு அங்குள்ள மக்களை பாதுகாப்பது. அதுவும் இந்த பாரத நாட்டிற்கு சொந்தமானது. நம் நாடு மிகப்பெரிய நாடு. சமீபத்தில், பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவுக்கு 66 கோடி மக்கள் வந்து புனித நீராடி சென்று இருக்கிறார்கள்.
அவர்களுக்கு யாரும் அழைப்பு விடுக்க வில்லை. ஆனால், அவர்களாக வந்து அவர்களுடைய கடமையாக அங்கே புனித நீராடினார்கள். ஆங்கிலேயர்கள் வந்து நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவற்றுக்காக முயற்சிகளையும் பல கொடுமைகளை செய்தார்கள்.
ஆனால், பாரதம் சனாதன பூமி. ஒருத்தருடைய விருப்பத்திற்கு எதிராக பாரதம் என்றுமே இருந்ததில்லை. யாரையும் பாகுபடுத்தி பார்த்ததில்லை. உங்களுடைய நம்பிக்கை, உங்களுடைய விருப்பப்பின்படி நீங்கள் இருக்கலாம். ஆனால், நாம் எல்லோரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள்.
அதனால்தான் நான் பெருமையாக சொல்வேன். உலகத்திலேயே ஒரே நாடு எல்லோருடைய நம்பிக்கையும் மதித்து அவர்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாடு பாரதம்" என்றார்.




















