‘சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை ஏற்படுத்தினார்கள்’ - ஆளுநர் ஆர்.என்.ரவி
சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை.
கோவை பேரூர் பகுதியில், அகில பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நொய்யல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கினார். ”நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது. பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படும் கலாச்சாரம் கொண்ட நாம் யார் என்பதை ஆறுகள் மூலமே சொல்லப்படுகிறது.
கடவுளின் மற்ற படைப்பையும் நாம் மதிக்க வேண்டும். படைக்கப்பட்ட குடும்பத்தில் நாம் ஒரு பொருள் என்பதை உணர வேண்டும். குருமார்கள், சந்நியாசிகள் ஆகியோர் தான் படையெடுப்பிலும் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். தற்போது மேற்கத்திய பண்பாடு நம்மை அந்த தொடர்பிலிருந்து தூண்டிக்கிறது. அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என்பதையும், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் குடும்பம் என்ற கருத்துருவை நம் நாடு உலக நாடுகளுக்கு ஜி20 மாநாடு மூலம் பிரதமர் கூறி வருகிறார்.
பூமியின் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் தொடர்பு வெளிப்படுவதை ரிஷிகள் சொன்னதுடன், அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்னை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்ததாலும், பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை. சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது.
நம் நாட்டை இந்நாட்டு மக்கள் தான் உருவாக்கினார்கள் என்றும், அரசு உருவாக்கவில்லை. நிலாவிற்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தியா வளர்ந்து, நிலா அவர்களுடைய சொந்தமில்லை. ஆனால் சில நாடுகள் அதை சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர். ஆனால் தற்போது இந்தியாவால் அதை சாதிக்க முடிந்தது. அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றிபெற்று உள்ளோம். நம் வலிமையை காண்பித்து உள்ளோம். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும் பயணிக்கிறோம். 2047 இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும்.
இந்த பாரதம் ரிஷி, குருமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்க இல்லாமல் அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம். வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.