Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Pongal Gift: தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க தலைமைசெயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தமிழர்களின் திருநாள்- பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருநாளாக உள்ளது. இந்த பண்டிகையானது இயற்கைக்கு, சூரியனுக்கு, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 14, 15, 16ஆம் தேதிகளில் தொடர் கொண்டாட்டங்களையொட்டி தமிழக அரசு சார்பாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு திமுக அரசு, 20 பொருட்களை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சக்கரை, வேட்டி மற்றும் சேலையோடு சேர்த்து கரும்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்காமல் மற்ற பொங்கல் தொகுப்பை மட்டுமே வழங்கியது. இதற்கு தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000
இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக மக்களை கவரும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு ஏற்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கே பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலை உள்ளது.
நிதிச்சுமையில் தமிழக அரசு
தற்போது தமிழகத்தில் 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், 1 கோடியே 10 லட்சம் பேர் அரிசி அட்டைதாரர்கள். எனவே இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சுமார் 1 கோடி குடும்ப அட்டைக்கு ரூ. 5000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்றால் சுமார் 12ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று முக்கிய முடிவை எடுக்கவுள்ளது. அந்த வகையில் தலைமைசெயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு- தமிழக அரசு இன்று முக்கிய முடிவு
இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்புடன் ரொக்கப்பணம் வழங்கலாமா.? அல்லது பொங்கல் பரிசுதொகுப்பு மட்டும் போதுமா என ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அல்லது நாளை பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரம் தகவல் வெளியாகியுள்ளது.





















