TN Unique Health ID to all : அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
பிரத்யேக சுகாதார அடையாள அட்டை மூலம் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப சுகாதார கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பிரத்யேக சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படும். மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப சுகாதார கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சுகாதாரப் பயனாளர்களின் பெயர், வயது, பாலினம், மொபைல் நம்பர், ஸ்மார்ட் கார்டு, முகவரி, துணை சுகாதார நிலையங்கள் மக்கள்தொகை சுகாதார பதிவு உள்ளிட்ட விவரங்களை ஒரே அடையாளத்தின் மூலம் பொதுவான தரவுதளத்தில் கொண்டு வர பொதுமக்கள் சுகாதார பதிவு (Population Health Registry) கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களை தேடி மருத்துவம் ரூ. 258 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது, 50 வட்டாரங்கள்& மூன்று மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 11086 பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் உயர் இரத்த அழுத்தம்/ நீரிழிவு போன்ற தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
497 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று நோய்ஆதரவு சேவைகள், இயன் முறை மருத்துவம், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிதல் போன்ற சேவைகள் இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
'மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற பொது சுகாதாரத் திட்டத்தின் முதுகெலும்பாக இந்த சுகாதார அட்டை உருவாகிறது. அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால், மருத்துவர்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்திக்கும் போது, மருந்துகள், பரிசோதனை முடிவுகள் தொடர்பான ஆவண கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு போகத் தேவையில்லை.
மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மற்ற அறிவிப்புகள்: 108 அவசர கால ஊர்தி சேவைகளுக்கு ரூ. 69.18 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 188 புதிய வாகனங்கள் வழங்கப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2400 செவிலியர்கள் மற்றும் 2448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தி, 1583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ. 266.73 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.