TN Free Bus For Ladies: ஓசி பயண சர்ச்சை : சாதாரண பேருந்துகளில் காசு கொடுத்தால் மகளிர்களுக்கு டிக்கெட்டா..? அரசு சொல்வது என்ன?
இலவச பயண பேருந்துகளில் மகளிர் காசு கொடுத்தால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று வெளியான தகவலுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக அரசு பேருந்துகளில் வெள்ளை பலகை அதாவது சாதாரண கட்டண பேருந்துகளில் விலையில்லா டிக்கெட் எடுத்து மகளிர் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவால் தமிழ்நாடு முழுவதும் தினசரி பணிக்கு செல்லும் பெண்கள், அவசரமாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் என லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மூதாட்டி ஒருவர் தனக்கு இலவச பயணம் வேண்டாம் என்றும், டிக்கெட் கொடுத்தால்தான் பயணிப்பேன் என்றும் பேருந்தில் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது.
இதுபோன்று பல பெண்களும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார்கள் வரப்பெற்றது. இந்த நிலையில், சாதாரண கட்டண பேருந்துகளில் காசு கொடுத்து டிக்கெட் பெற பெண்கள் விரும்பினால், அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் மகளிர் இலவச பயணத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், சில பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பேருந்தில் பயணிக்கும் பெண்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிக்கின்றனர் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது சர்ச்சைப் பேச்சைத் கொடர்ந்துதான் கோவையில் மூதாட்டி டிக்கெட் எடுத்துதான் பயணிப்பேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், மக்களிடம் கண்ணியமாக நடக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏபிபி நாடுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு மகளிர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் அதிகாரப்பூர்வமாக கொடுக்கவில்லை. ஒரு சில இடங்களில் வேறு வழியின்றி அப்படி அதிகாரிகள் சொல்லியிருந்தால், அதனை பின்பற்றக் கூடாது என கூறப்பட்டுள்ளது. வழக்கம்போல் இலவச பேருந்துகளில் மகளிர் கட்டணம் இன்றி பயணிக்கலாம்" என்று விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க : 'ஓசி பஸ்' சர்ச்சை: விளையாட்டாகப் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டாம்- அமைச்சர் பொன்முடி
மேலும் படிக்க : Minister Ponmudi : கிராமசபை கூட்டத்தில் பாதியிலே வெளியேறிய அமைச்சர் பொன்முடி..! ஏன் தெரியுமா...?