Covid-19 Second Wave: குழந்தைகளை வதைக்கும் கொரோனா இரண்டாவது அலை!
முதல் அலையின் போது பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறி தென்படவில்லை என்றும், தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அறிகுறி குழந்தைகளுக்கு அதிகம் தென்படுகிறது என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையில் , தமிழகத்தில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 0-12 வயதுக்குட்பட்ட 1,307 குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 16 லட்சத்துக்கும் ( 16,99,225) அதிகாமானோருக்கு கொரோனா நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 13-60 வயதுக்கு உட்பட்டவரfகளில் 14 லட்சம் பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 755 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 61,126 ஆக உள்ளது.
தற்போது, மாநிலத்தின் ஓட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 82 சதவிகித பாதிப்புகள் 13-60 வயதுக்கு உட்பட்டவர்களிடத்தில் காணப்படுகிறது. கொரோனா முதல் அலையுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது அலையில் வயது சார்ந்த பாதிப்புகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றே சொல்லலாம்.
கொரோனா அலை | 0-12 வயது பிரிவினர் (%) | 13-60 வயது பிரிவினர் (%) | 60 வயதுக்கு மேற்பட்டோர் (%) |
முதல் அலை (2020 March 1 - 2021 March 24) | 3.6 | 82.6 | 13.6 |
இரண்டாவது அலை (March 24- May 19) | 3.52 | 82.7 | 13.5 |
உதாரணமாக, முதல் அலையின் போது கூட மொத்த பாதிப்புகளில் 80 விகிதத்துக்கும் அதிகமான பாதிப்புகள் 13-60 வயதுக்கு உட்பட்டவர்களிடத்தில் காணப்பட்டது.
இருப்பினும், முதல் அலையின் போது, 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மாத தொற்று எண்ணிக்கை 2663 ஆக இருந்த நிலையில், இரண்டாவது அலையில் ஒரு மாத தொற்று எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது, முதல் அலையின் ஒப்பிடுகையில், இரண்டாவது அலையில் குழந்தைகளின் ஒருமாத தொற்று எண்ணிக்கை 500 மடங்காக அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தொற்று ஏற்படும் போது, குழந்தைகளுக்கும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருவதையே தரவுகள் காட்டுகின்றன.
உதாரணமாக, தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1 கோடியே 84 லட்சத்து 93 ஆயிரத்து 3 கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில், பிரத்யேகமாக தனி அறை இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தனி அறை காணப்படுவதில்லை. 11 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில் பிரத்தியோக தனிஅறை இல்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 80 சதவிகித நோயாளிகள் வீடுகளில் தனிமைத்திப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால், சமூக விலகல் போன்ற கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், முதல் அலையின் போது பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறி தென்படவில்லை என்றும், தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அறிகுறி, குழந்தைளுக்கு அதிகம் தெரிகிறது.
அதிகப்படியான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தாண்டி, பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது போன்ற தரவுகளையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
முன்னதாக, 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை அதன் உற்பத்தியாளர் பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்வதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
ஹைதராபாத்தில் இயங்கும் பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் நிறுவனம், தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ சோதனையை 2 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களிடையே மேற்கொள்ள முன்மொழிந்திருந்தது. 525 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.