TN Corona LIVE Updates : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது
மே 24 முதல் ஒருவார காலத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
LIVE
Background
Tamil nadu Corona News Live Updates: தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது (73,25,078).
இவர்களில் 53,67,365 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். 19,57,713 பேர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டவர்கள். மே 15-21 வரை தமிழகத்தில் 2 லட்சத்து 23 ஆயிரம் 556 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உதாரணமாக, ஏப்ரல் 10- 16 ஆகிய வார நாட்களில் 9 லட்சத்து 56 ஆயிரம் 368 பேர் தடுப்பூசி டோஸ்கள் எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது
தமிழகத்தில் வரும் திங்கள் முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை மட்டும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், அரசின் உத்தரவு வரும் மதுபானக் கடைகள் மூடப்பட்டுதான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 873 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரத்து 559 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 671 ஆக பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 74 ஆயிரத்து 61 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 7 லட்சத்து 32 ஆயிரத்து 762 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 19 ஆயிரத்து 895 நபர்களும், பெண்கள் 15 ஆயிரத்து 978 நபர்களும் அடங்குவர். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 776 ஆகும். இதனால், மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 2 ஆயிரத்து 537 நபர்கள் ஆவார்கள். கொரோனா வைரசினால் நேற்று 467 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று கொரோனா தொற்றினால் தமிழ்நாடு முழுவதும் 448 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 169 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 86 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் மட்டும் உயிரிந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர். தமிழகத்தில் கொரோனா பரவலின் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் சென்ற நிலையில், இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. புதியதாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி விதிக்கப்பட்டுள்ளதால், மனிதர்கள் வெளியில் நடமாடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் கொரோனா பரவலை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சுகாதாரத்துறையினரும், ஆய்வாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தினால், எந்த தளர்வுகளும் இல்லாத நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பிற மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 176 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போலவே, அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் இன்று ஒரே நாளில் புதியதாக 28 ஆயிரத்து 514 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 176 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கேரள முழுவதும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாநிலங்களில் நாட்டின் தலைநகரான டெல்லியும் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்தும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.