TN Congress President: அடுத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவர்தான்? கே.எஸ்.அழகிரி கூறியது என்ன?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை இருப்பார்கள், அதனை தொடர்ந்து வேறு தலைவர் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றம் மற்றும் சத்தீஸ்கர், டெல்லி உள்ளிட்ட மாநில தேர்தல்களை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில தலைமையை மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “”சென்ற சட்டமன்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளோம். பா.ஜ.க எங்களுடன் போட்டி என கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் போட்டியிட்ட 23 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 72% வெற்றி கிடைத்தது. முன்பை விட அதிக தொகுதிகள் கேட்டு அதிக இடத்தில் வெற்றி பெறுவோம்.
காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பேன்
இந்த வெற்றி என்னுடைய தலைமையில் கிடைத்தது அல்ல, இதற்கு முழுக் காரணம் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான். அவர்களில் பரப்புரை, சுற்றுப்பயணம், சக கூட்டணி தோழமைகள் ஒன்றிணைந்ததுதான் இந்த வெற்றி. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பேன். கடந்த 25 ஆண்டு காலத்தில் எந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களும் செயல்பட்டதை விட நான் அதிக காலம் இருந்திருக்கிறேன். என் கட்சி தந்த ஊக்கம்தான் இதற்கு காரணம்” என கூறியுள்ளார்.
மேலும் திமுக உடனான கூட்டணி பலமாக இருப்பதாகவும், கட்சி ரீதியான செயல்பாடுகள் குறித்தும் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என்றும் தலைவர் பதவி மாற்றம் குறித்த தகவல் அறிந்து வரவில்லை என குறிப்பிட்டார்.
அடுத்த தலைவர் யார்?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ் அழகிரி பொறுப்பேற்ற பின் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைத்தது. இது போன்ற சூழலில் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அப்படி மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யாராக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக தேர்தல் வெற்றியில் முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் முக்கிய பங்கு வகித்ததால் இவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் செல்வப்பெருந்தகை மற்றும் ஜோதிமணி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது கட்சி அதிருப்தியில் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை தவிர செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்படுகிறது.