(Source: ECI/ABP News/ABP Majha)
5 மடங்கு பெரியதாகும் சென்னை... விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல்
சென்னை மாநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இணைத்து 5 ஆயிரத்து 904 சதுர கிமீ பரப்பளவு விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரை விரிவாக்கம் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சென்னை பெருநகரை 1,189 சதுர கிலோ மீட்டரிலிருந்து 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்த முந்தைய அதிமுக அரசு திட்டமிட்டிருந்தது. முந்தைய திட்டத்தின்படி, சென்னை பெருநகரப் பகுதியின் விரிவாக்கம், சென்னை நகரத்தை நாட்டிலேயே இரண்டாவது பெரிய நகரமாக மாற்றப்பட்டிருக்கும்.
தற்போது, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, 1,180 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னை மாநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இணைத்து 5 ஆயிரத்து 904 சதுர கிமீ பரப்பளவு விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான அரசு உத்தரவு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானாவுடன் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், சென்னை விரிவாக்கம் தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Weekly news wrap-up featuring CMDA’s shoreline revitalization, expansion of CMA, the inauguration of Kilambakkam bus terminus & citizen engagement for the Third Masterplan.
— Chennai Metropolitan Development Authority (@CMDA_Official) October 14, 2022
CMDA also solicited inputs from 19 other departments on projects like Satellite Towns & Outer Ring Road. pic.twitter.com/m0kTs2XZcA
சென்னை பெருநகரப் பகுதியை மூன்றாகப் பிரிக்க சிஎம்டிஏ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை மாஸ்டர் திட்டத்தின் கீழ் அல்லாமல் பிராந்திய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி (ஒரு சில பகுதிகள்), அரக்கோணம் (ஒரு சில பகுதிகள்), திருவள்ளூர், பூந்தமல்லி (ஒரு சில பகுதிகள்) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்பட 2,908 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட எட்டு தாலுகாக்களைக் கொண்டு சென்னை பெருநகரப் பகுதி வடக்கு உருவாக்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், திருப்போரூர், குன்றத்தூர் (ஒரு சில பகுதிகள்) மற்றும் வண்டலூர் (ஒரு சில பகுதிகள்) ஆகிய ஏழு தாலுகாக்களில் 1,809 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு சென்னை பெருநகரப் பகுதி தெற்கு உருவாக்கப்படுகிறது.