TN Assembly: சமூக சீர்திருத்தவாதி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
பெரியவர் இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![TN Assembly: சமூக சீர்திருத்தவாதி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.. Tamil Nadu Chief Minister Stalin has announced that a centenary memorial will be set up in Chidambaram to commemorate Ilayaperumal . TN Assembly: சமூக சீர்திருத்தவாதி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/e1403b9304797a78d0e4a980bea7e7b51681801792364589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரியவர் இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவையின் நிகழ்வு போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசியவர் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய இளையபெருமாள் நூற்றாண்டை போற்றும் வகையில் விதி 110 கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார்.
சமூக சீர்திருத்தத்தின் பெருமை மிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர், ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர் இளையபெருமாள். சிதம்பரம் மண்ணில் பிறந்து - நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக அடைபட்டு இருந்த உரிமை வாசலைத் திறந்தவர் என்றார். மேலும், பள்ளியில் படிக்கும் போது இரட்டைப் பானை முறையை பார்க்கிறார். பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார். இப்படி அவர் தொடர்ச்சியாக உடைத்ததால் தான் இரட்டைப் பானை முறை அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் நீக்கப்பட்டது என்றார்.
அதன் பின் அவர் இராணுவத்தில் சேர்ந்தார். அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. உடனடியாக - துணிச்சலோடு உயர் அதிகாரிக்கு புகார் செய்கிறார். அந்த பாகுபாடு களையப்படுகிறது. ஓராண்டு காலத்திலேயே இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்துவிடுகிறார்.
ஒன்று பட்ட தென்னார்க்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர். மேலும், பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சியும் - இதர சமூகத்தினர் மத்தியில் ஓரளவு மனமாற்றமும் ஏற்பட இவரது போராட்டங்கள் தான் காரணம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாள் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் - 1952 ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அப்போது அவருக்கு வயது 27. அதன் பின் டெல்லி சென்ற அவர் அம்பேத்கர் சந்தித்தார். 'இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இது வரை என்ன செய்திருக்கிறீர்கள்?' என அம்பேத்கர் கேட்டிருக்கிறார். தென்னார்க்காடு - தஞ்சை மாவட்டங்களில் தான் நடத்திய மக்கள் போராட்டங்கள் - தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு அம்பேத்கரே வியப்படைந்து பாராட்டினார்.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர். அவரது பெரும் சிறப்புகளில் மிக முக்கியமானது, பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்காக 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்தது தான். மூன்றாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, சாதிக் கட்டமைப்பையும், தீண்டாமைக் கொடுமையையும் ஆய்வு செய்ததாகவும், அந்த அறிக்கையானது இந்தியச் சமூக அமைப்பின் சாதிய வேர்களை மறைக்காமல் துல்லியமான வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது.
எனவே இந்த அறிக்கை வெளியே வருவதைத் தடுக்க சிலர் முயற்சித்தார்கள். அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அன்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பி வந்து அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் மூலம் தான் பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை தான்.
1971 ஆம் ஆண்டு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார், அதற்கு எதிராகச் சிலர் உச்சநீதிமன்றம் சென்றார்கள், அப்போது கழக அரசு தாக்கல் செய்த மனுவில், 'சமூகசீர்திருத்தத்துக்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும்' என்பதற்கு ஆதாரமாக இளையபெருமாள் ஆணைய அறிக்கையையே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இளையபெருமாள் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தார். அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் 'சம்மந்தி' என்று தான் அழைப்பார். 1998 ஆம் ஆண்டு அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்குதான் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார்.
அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது. இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும்” என்றார்.
. மேலும், 'தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும். அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும்' என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)