CM Stalin: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் - முதலமைச்சர் கண்டனம்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. நேற்றைய தினம் திருப்பூர் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ஆனால் அவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தி பரவியது.
இதனால் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். பின்னர் போலீசார் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது தெரிய வந்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வரிசைக்கட்ட தொடங்கியது. இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் செய்தி பரவியது.
ஆனால் ஹோலி பண்டிகை வருவதால் ஊருக்கு செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருப்பூர், தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் திருப்பூரில், வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய், ஏதேனும் பிரச்சினையெனில் 94981-01300, 0421 - 2970017 என்ற சிறப்பு உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கடும் கண்டனம்
இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக வேலை வாய்ப்புத் தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வருவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய சலுகைகளையும், பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு செய்து தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு. சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், தமிழ்நாட்டில் நடைபெற்றதாக படங்களையும் வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும்அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன் எனவும்